‘ஜி.டி.என்’ தொடங்கும் முன் ஜி.டி.நாயுடு பற்றி அதிகம் தெரியாது: மாதவன் வருத்தம்

Priya
868 Views
1 Min Read

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.

சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மாதவன் பேசும்போது, “இந்தப் படத்துக்கு முன்பே சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஜி.டி.நாயுடு திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி. திரைப்படமாக உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் ஜி.டி. நாயுடு என்ற கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மரியாதையும் எங்கள் எல்லோருக்கும் இருந்தது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்னால் ஜி.டி.நாயுடு பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய மேதையை பற்றி ஏன் நிறையபேருக்கு தெரியவில்லை. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம்” என்றார்.

சத்யராஜ் கூறும்போது, “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி.நாயுடு மியூசியத்தை பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது. ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா? என்று ஆச்சரியமாக இருந்தது. உலகம் முழுவதும் இந்தப் படம் நிச்சயம் சாதனை செய்யும். மாதவனின் சினிமா பயணத்தில் இது முக்கியமான மைல்கல் திரைப்படம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply