ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா உள்பட பலர் நடித்துள்ள ஹைக்கூ திரைப்படம் அக்.23-ல் வெளியாகிறது. அருளானந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சித்துக்குமார் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் சசி, பொன்ராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் சசி பேசும்போது, ‘‘மிகவும் எளிமையான கதை ‘ஹைக்கூ’. இரண்டு விதமான காதலை நுணுக்கமாகச் சொன்ன இயக்குநருக்கும் சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துகள். நிச்சயம் இது படக்குழுவினருக்கு மைல்கல் திரைப்படமாக அமையும்” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்து விட்டேன். கவிதையான படம். படத்தின் கதை புதிதானது. காதலை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் நமக்கு காட்டும். இது போன்ற கதையை கொடுத்த இயக்குநர் யுவராஜுக்கு வாழ்த்துகள்” என்றார்.

