உண்மையைப் பேசுகிறது ‘டோரதி’ படம்: திருநங்கைகள் ஆதரவுக் குரல்

Priya
702 Views
2 Min Read

கடந்த வாரம் வெள்ளித்திரையில் வெளியான ‘டோரதி’ படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆன்லைனில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படம் குறித்த எதிர் விமர்சனங்களுக்கு எதிராக திருநங்கைகள் குரல் கொடுத்துள்ளனர்.

‘டோரதி’ படம் தங்களது நிஜ வாழ்வின் யதார்த்த அனுபவத்தை பேசி உள்ளதாக திருநர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்காக படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தாங்கள் நன்றி கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தப் படம் குறித்து எதிர்மறையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

“எங்களை போன்ற திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குழந்தை பருவத்தில் இருந்து எப்படி வாழ்வை எதிர்கொள்கிறார்கள் என்பதை அனைவரும் அறியும் வகையில் டோரதி படம் உள்ளது. ஓர் அமைப்பாக இதனை அனைவரிடத்திலும் எங்களால் கொண்டு செல்ல முடியாது. அதனை இந்தப் படம் செய்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே நேரத்தில் பாலினம் மற்றும் பாலியல் விருப்பத்துக்கு இடையில் வேறுபாடு உள்ளது. இது குறித்த குழப்பம் சமுதாயத்தில் உள்ளது. அதற்கு பாலினக் கல்வி சார்ந்த புரிதல் அவசியம் தேவை” என்று திருநங்கையான கலைமாமணி சுதா தெரிவித்தார்.

​​சமூகத்துக்கு ஏற்ப நடந்து கொள்வதற்காக சுமார் 15 ஆண்டுகள் எனது உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ்ந்தேன். இந்தப் படம் எங்கள் சமூகத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தி உள்ளது என்று திருநங்கையான மேக்னா தெரிவித்தார்.

மேலும், இந்த படத்தின் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் மக்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Advertisement

‘டோரதி’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் 10-வது படம் ‘டோரதி’. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் தனது தம்மம் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.

படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது.

Share This Article
Leave a Comment

Leave a Reply