அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சூப்பர் ஹீரோ’. இதில் தேஜு அஷ்வினி நாயகியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணு கோபால் இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் சினிஸ் ரெடாக்டட் ஸ்டூடியோஸின் ஷான்ஜன்.ஜி, இணைந்து தயாரித்து உள்ளார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் பற்றி இயக்குநர் விக்னேஷ் வேணு கோபால் கூறும்போது, “இது எனக்கு முதல் படம். இயக்குநர் சினிஸிடம் ‘பலூன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அவரே இப்படத்தைத் தயாரிக்கிறார். இது ஆக் ஷன் டிராமா கதை என்றாலும் அண்ணன் – தம்பி பிரச்சினை முக்கியமானதாக இருக்கும். யாரைப் பற்றியும் கவலைப்படாத சுயநலமான அண்ணன், ஒரு கட்டத்தில் தனது தம்பிக்காக என்ன செய்கிறான் என்பது கதை.
சில சர்பிரைஸ் விஷயங்கள் படத்தில் இருக்கும். மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்தில் நடித்த வசிஷ்ட், தம்பியாக நடிக்கிறார். அண்ணன் – தம்பிக்கான உணர்வுப்பூர்வமான காட்சிகள், ரசிக்கும்படி இருக்கும். வில்லனாக சாண்டி மாஸ்டர் நடிக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸுக்காக ஒரு தொழிற்சாலை செட் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தினோம். இது சென்னையில் நடக்கும் கதை என்றாலும் பிளாஷ்பேக் பகுதி கோவில்பட்டி அருகே நடக்கும். படப் பிடிப்பு முடிவடைந்துவிட்டது” என்றார்.

