‘இந்தியா அடுத்த 4 ஆண்டுகளில் 100 ஜிகாவாட் காற்றாலை மின் திறனை எட்டும்’ என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘விண்டர்ஜி இந்தியா 2026’ – 8-வது சர்வதேச மாநாடு மற்றும் காற்றாலை மின்சார கண்காட்சியை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்தார். இவ்விழாவில் தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், இந்திய காற்றாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷ் தாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிரத்யேக அரங்கு களை அமைத்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 கண்காட்சியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் காற்றாலை எரிசக்தி துறை மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் 6.05 ஜிகாவாட் வரை உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 43 ஜிகாவாட் மின் திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன. இந்திய காற்றாலை டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கணிப்பின்படி, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் காற்றாலை மின்உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட்டைத் தாண்டும் என நம்புகிறோம். அதேபோல், 2035-ம் ஆண்டில் 200 ஜிகாவாட்டுக்கும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் தொகுப்புக்கு கொண்டு செல்வதற்கான ‘எவாகுவேஷன்’ கட்டமைப்புகளை சமாளிக்க ‘கிரீன் எனர்ஜி காரிடார்’ திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இதனால் 135 ஜிகாவாட் கிடைக்கிறது. இத்திட்டங்கள் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கடல்சார் காற்றாலை மின்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, யூனிட்டுக்கு ரூ.5 என்ற விலையில் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, “தமிழகம் முதலீடுகளுக்கான சிறந்த தளமாக உள்ளது. முதல்வரின் முன்னெடுப்பால் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.

