சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களைக் கடந்த கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சாதனைகளையும் கிரிக்கெட் பயணத்தையும் விவரிக்கும் வகையில், ‘தி 15,000 கிளப்: இரண்டு தலைமுறைகள், ஒரே உச்சம்’ என்ற சிறப்பு நூலை ஸ்போர்ட்ஸ்டார் இதழ் வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்தில் நேற்று இதற்கான வெளியீட்டு விழா நடைபெற்றது.
‘எம்ஆர்எஃப்’ தலைவர் கே.எம்.மேமன் நூலை வெளியிட THGPPL தலைவர் என்.முரளி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ‘எம்ஆர்எஃப்’ நிர்வாக இயக்குநர் ராகுல் மேமன் மாப்பிள்ளை, ‘தி இந்து’ குழும இயக்குநர்கள் என்.ராம், வேணுகோபால் மற்றும் KSL தலைவர் ரமேஷ் ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நூலில் சச்சின், விராட் கோலி ஆகியோரின் சாதனைகள் மட்டுமின்றி, அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. இரு வீரர்களுடன் விளையாடிய முன்னாள் சக வீரர்களின் நேர்காணல்கள் மூலம் அவர்களது பேட்டிங் நுட்பம், மனநிலை, தனிப்பட்ட குணங்கள், அணியின் ஓய்வறையில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையும் விவரிக்கப்பட்டுள்ளன.
சிறுவயதிலேயே கிரிக்கெட் திறமையால் கவனம் ஈர்த்த சச்சினின் வளர்ச்சி, நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி உருவெடுத்தது வரையிலான பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்கு இருவரும் விட்டுச் சென்ற தனித்துவமான பங்களிப்புகளையும் எடுத்துரைக்கிறது.

