திருவான்மியூர் – உத்தண்டி இடையிலான உயர்மட்ட சாலைத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அதேபோல் சாலைகளைப் பழுது பார்த்ததில் ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் நடைபெற்றுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளில் கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்த புத்தகத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறையில் ஊழல் அதிகமாக இருந்தது. தவெக ஆட்சிக்கு வந்ததும் முதல் 6 மாதங்களில் துறைகளை மறுசீரமைத்துள்ளோம். அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் பல்வேறு டெண்டர்களைப் பெற்றுள்ளன. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். தற்போதைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது.
2025-ல் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் ‘பேட்ச் ஒர்க்’ பணிகளுக்காக மட்டும் ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது.
திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலைத் திட்டம் ஆலோசனைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினாலும் புதிதாக டெண்டர் கோரப்படும். தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை உயர்மட்ட சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்துக்குள் திறக்கப்படும்.
அரசுக் கட்டிடங்கள் அடுத்த 75 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில் தரமாகக் கட்டப்படும். மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்டவை தரை தளம் மற்றும் 14 மாடிகளுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தரமற்ற அரசு கட்டிடங்கள் இனி கட்டப்படாது.
5,226 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களுக்குச் சிவப்பு நிற எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 15,661 கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள், மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்த நிறுவனங்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மீண்டும் டெண்டரில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். அதிகாரிகளின் பணியிட மாறுதல், பதவி உயர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளும் தடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 8 மற்றும் 10 வழிச்சாலைத் திட்டங்கள் குறித்து வரும் 17-ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேச உள்ளேன்.
சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட டெண்டர் பணிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர சென்னையில் சாலை, மழைநீர் வடிகால் பணிகளை இனி நெடுஞ்சாலைத் துறையே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்குத் தனிச்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டுத் துறையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி, 10 இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள், மாவட்டந்தோறும் விளையாட்டு விடுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

