“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது” என முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் குற்றம்சாட்டினர்.
விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுப்பின்மையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஸ்ரீநிதி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா உள்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்கம் தென்னரசு பேசுகையில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் – ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. சிறைச்சாலையை உடைத்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பசும்பொன் போன்ற இடங்களுக்கு வருகை தரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதிலும் அரசு தவறி வருகிறது.
மறுபுறம், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதற்குப் போட்டியாக மின் கட்டணமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
அவரது தலைமையில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் வழிகாட்டுதலின்படி மகளிரணி தனது படையை களமிறக்கி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்து, மீண்டும் நல்லதொரு சூழல் உருவாக மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், “பெண்களின் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின் தடை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பெண்களின் குரலாவது முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்வர், தற்போது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை.
5 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் சூழல் நிலவுகிறது. இத்தகைய குற்றங்களைத் தடுக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் பெண்களை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பெண்களின் குரலாவது முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் குடும்பங்களின் செலவுகள் அதிகரித்து பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சிறு குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அரசு உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் கோரிக்கைகளையும், அவர்களின் குரலையும் தமிழக அரசும், முதல்வரும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

