சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தைத் தொடர்ந்து, சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்திலும் கடந்த 23-ம் தேதி முதல் ஏசி மின்சார ரயில் சேவை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 5 நாட்கள் ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கட்டணப் பட்டியலின்படி, 51 கி.மீ. முதல் 70 கி.மீ வரையிலான தொலைவுக்கு ரூ.100 முதல் ரூ.230 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாலங்காட்டில் இருந்து 59 கி.மீ தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரலுக்கு முறைப்படி, ரூ.105 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், பயணிகளிடம் ரூ.215 வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
டிக்கெட் கவுன்ட்டர்களில் இது குறித்து, பயணிகள் கேள்வி எழுப்பியபோது, ரயில்வே நிர்வாகம் கொடுத்த அறிவுறுத்தல்படியே கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஏசி மின்சார ரயில் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தாலும், சாமானிய மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையிலான இந்த கூடுதல் கட்டணக் குளறுபடிக்கு பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஏசி மின்சார ரயில் கட்டணம் கி.மீ. அடிப்படையில் தான் வசூலிக்கப்படுகிறது.
இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், இந்த கட்டணக் குளறுபடியை உடனடியாகச் சரிசெய்து, ஏசி மின்சார ரயிலின் ஒட்டுமொத்த கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

