திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, கோயில்களில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், அன்னதானத் திட்ட விரிவாக்கம், கல்வி நிறுவன மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அப்போது, தனியாரால் தயாரிக்கப்படும் பிரசாதங்களைத் தவிர்த்து, முதுநிலைக் கோயில்களின் வளாகத்திலேயே கோயில் நிர்வாகம் மூலம் பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட 37 முதுநிலைக் கோயில்களில், நிர்வாகம் மூலம் தரமான பிரசாதங்கள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு, புளியோதரை, அதிரசம், மிளகுவடை, தேன் குழல் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினார்.
இதில் தேன் குழல் ரூ.25-க்கும், மற்ற பிரசாதங்கள் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், கோயில் துணை ஆணையர் சி.நித்யா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

