“திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம். மற்றபடி, திமுக – அதிமுக எப்படி ஒன்றாக் சேர்ந்து ஆட்சியமைக்க முடியும்? அதிமுக – திமுக எந்தக் காலத்திலும் கூட்டு சேரவே முடியாது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப் படைக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைமைதான் உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக பேரிடரை, பெரும் ஆபத்தான ஆட்சியை தமிழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர். வெறும் சினிமா மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். நிழலில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக உருமாறி வருகிறார்.
மின்வெட்டுக்கு என்றே ஓர் அமைச்சர் இருக்கிறார். இந்த ஆட்சியில் விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் போராடுகின்றனர்.
அரிசி, பருப்பு, உப்பு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுபற்றி கேள்வி கேட்டால், அந்தஸ்துக்காக சன்ன ரக அரிசியை மக்கள் சாப்பிடுவதாக சொல்கிறார். அந்தஸ்துக்காக மக்கள் கார், நகைகள் வாங்குவார்களே தவிர, யாரும் அரிசி வாங்கி சாப்பிடமாட்டார்கள். அரிசி விலை உயர்வு இந்த ஆட்சிக்கு ஆபத்தாக முடியும்.
போதைப்பொருள் புழக்கம், கடத்தல் ஆகியவை அதிகமாக இருந்ததுதான் திமுக ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. இன்று தவெகவினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். பல சமூக விரோத செயல்களில் தவெகவினர் ஈடுபடுகின்றனர். தமிழகத்துக்கு பிடித்த சாபக்கேடாக தவெக ஆட்சி அமைந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சியை மக்கள் கொடுத்தார்களோ, அவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி வீழும்.
அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களுக்கு ஆசைகாட்டி வாக்குகளை பெற்று ஆட்சியமைத்ததை மறைப்பதற்காகவே அதிமுக – திமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக கூறினார்கள்.
தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை இருந்தது. எனவே, தவெகவால் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில், நீங்கள் நேர்மையாக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தவெகவுக்கு நான் கோரிக்கை வைத்தேன்.
தவெகவால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில், பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது உண்மை. அதற்கு தவெகவிடம் ஆதரவு கேட்கவே முடிவு செய்தோம், திமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. அப்போது பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஆதரவளிக்க கம்யூனிஸ்டுகள் தயங்கினார்கள்.
எனவே, திருமாவளவனை முதல்வராக்க இபிஎஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சித்தோம். மற்றபடி, திமுக – அதிமுக எப்படி ஒன்றாக சேர்ந்து ஆட்சியமைக்க முடியும்? அதிமுக – திமுக எந்தக் காலத்திலும் கூட்டு சேரவே முடியாது” என்றார்.

