“பத்திரப் பதிவு, நில அளவைப் பணிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுக” – மு.வீரபாண்டியன்

Priya
602 Views
2 Min Read

பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு மற்றும் நில அளவை பணிகளைத் தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு சட்டம் தனியார் அசையும், அசையாச் சொத்துகளை வைத்துக்கொள்ள உரிமை அளித்துள்ளது. அதனை பாதுகாத்துக் கொள்ளவும் சில சட்டப் பிரிவுகள் மூலம் உறுதியளித்துள்ளது.

தனி மனித உடைமைகளில் நிலவுடைமை என்பது உணர்வுடன் கலந்து இயங்கி வருவது. இதில் ஒரு குடும்பத்தின் இரத்த உறவுகளுக்குள் பிரச்சினைகளும் மோதலும் ஏற்பட்டு வருகின்றன. நிலப் பத்திரப் பதிவு நடைமுறைகளில் தளர்வு நிலை இருந்த காலத்தில், சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த அதிகார அத்துமீறல்களும் நடந்த தவறுகளும் நாடறிந்த செய்தியாகும்.

நிலப் பிரச்சினையின் தீர்வுக்கு நில அளவை அடிப்படையானது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியை தனியாரிடம் வழங்குவது பேராபத்தை ஏற்படுத்தும். விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அளவைகளில் ஏற்படுத்தும் குளறுபடிகள் சீர்படுத்த முடியாத சிக்கலை உருவாக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசுத் துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாக உரிமம் பெற்ற தனியார் நில அளவையாளர்களை பயன்படுத்துவது மற்றும் குறிப்பிட்ட சேவைகளை அவுட்சோர்சிங் (Outsourcing) முறைக்கு மாற்றுவது என்ற கொள்கையை நில அளவைத் துறையில் அறிமுகம் செய்ய முனைவது மக்கள் விரோதச் செயலாகும். அது தவறான கொள்கை என்பதோடு, அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.

காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பிட முயற்சிகளை மேற்கொள்ளாமல், பணியாளர் பற்றாக்குறை, பணியாளர்களுக்கு பணிச் சுமை எனக் காரணம் காட்டி , தனியாரிடம் பத்திரப் பதிவு மற்றும் நில அளவைப் பணியை ஒப்படைக்கும் முயற்சியை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன் அதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

நில அளவைப் பணிகள் நூறு சதவீதம் அரசுத் துறையில் மட்டுமே இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்து, அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply