ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்தார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், யமுனையைத் தூய்மைப்படுத்துவதற்காக ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் யமுனை நதியில் கழிவுநீர் கலக்க அனுமதித்தன. நாங்கள் அதனை மே 2029-க்குள் தூய்மைப்படுத்துவோம். பாஜக தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இது எதிர்க்கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் தேர்தல் தோல்வியை மறைக்க வாக்குத் திருட்டு நடப்பதாக சாக்குப்போக்குகளை கூறுகின்றனர். ராகுல் ஜி, நீங்கள் தொடர்ந்து வாக்குத் திருட்டு பற்றிப் பேசுகிறீர்கள். ஏனென்றால் ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள்.
அரசியல் சூழ்ச்சி மூலமோ கூட்டத்தைக் கூட்டி அழுத்தம் கொடுப்பதன் மூலமோ மக்கள் வழங்கிய தீர்ப்பை உங்களால் மாற்ற முடியாது. தேர்தல்களில் வெல்வதற்கு போராட்டங்களையும் தர்ணாவையும் நடத்தினால் மட்டும் போதாது. பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அரசு அகற்றப்படும். தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வரும். போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

