“நேரடி பரிமாற்ற திட்டத்தில் பயனாளிகளுக்கு இதுவரை ரூ.50 லட்சம் கோடி வழங்கல்” – பிரதமர் மோடி பெருமிதம்

Priya
861 Views
2 Min Read

அரசு சேவைகளை வழங்குவதில் மொபைல் போன்கள் முக்கிய பங்கை வகிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்திய மொபைல் காங்கிரஸ் அமைப்பின் 10-ம் ஆண்டு மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மொபைல் போன் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், நிர்வாகம் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது.

நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் இப்போது மொபைல் போன்களிலேயே கிடைக்கின்றன. மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அரசு நேரடியாக பணத்தை அனுப்புகிறது.

நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டம் மூலம் ரூ.50 லட்சம் கோடி பயனாளிகளின் மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ரூ.5 லட்சம் கோடி தவறான கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவியை வழங்கும் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் ரூ.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளன. இத்தொகை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அளிக்கப்படுகிறது.

பணம் வரவு வைக்கப்பட்டவுடன் விவசாயிகள் தங்கள் மொபைல் போன்களில் அதற்கான அறிவிப்பைப் பெறுகிறார்கள். குறைவான பயணம், குறைவான காத்திருப்பு நேரம், குறைவான செலவு, அதிக வசதி ஆகியவற்றை மொபைல் போன்கள் உறுதி செய்துள்ளன.

2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில், மொபைல் இணைய வேகம் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. 5ஜி இணைப்பு வசதி நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்துள்ளது. தற்போது 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பேஸ் ஸ்டேஷன்கள் மூலம் இந்த நெட்வொர்க் இயங்கி வருகிறது.

5G பயனர்களின் எண்ணிக்கையை 55 கோடியில் இருந்து 2030க்குள் 100 கோடியாக இரட்டிப்பாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தில் இந்திய மொபைல் காங்கிரஸின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் முன்னேற்றத்தையும் அதன் லட்சியங்களையும் பிரதிபலிக்கும் ஒரு தளமாக இது உருவெடுத்துள்ளது.” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply