நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் பிஜி 2025-26 கல்வி ஆண்டுக்கான சேர்க்கையில் தகுதி மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தசூழலில் நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கையை ஆய்வுசெய்து சீரமை்க்க சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலை நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதனிடையே நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மருத்துவக் கல்விச் சேர்க்கை முறையை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிக முக்கியமானது என்பதால் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது. நிபுணர்குழு் அறிக்கையை 3 வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

