நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை யின் 47-வது ஆண்டு விழா அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் நடந்தது. கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திண்டிவனம் தாய் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாத சம்பள பங்களிப்புக்காக ரூ.6,28,000 மற்றும் ஈரோடு சுடர் என்ற அமைப்புக்கு ரூ.2 லட்சம் மற்றும் வாழை என்ற அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிறகு சூர்யா பேசும்போது, “அகரம் தொடங்கி 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7 ஆயிரம் பேரை எங்களால வந்து தொட முடிஞ்சிருக்கு. இன்னும் பல விஷயங்கள் அகரம் மூலமா நடந்துகிட்டே இருக்கு. நாம முன்னேறி வாழ்க்கையில மேல வந்துட்டா, வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, அக்கம் பக்கத்துல யார் இருந்திருக்காங்க?
நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியா வந்திருக்காங்க? நமக்கு யார் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிறவங்களை மறந்துட வேண்டாம். அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்கணும்.
நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால நாம எதை யும் கத்துக்க போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமா பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயே தான் நாம இருப்போம். எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம்.
ஒரு மணி நேரம் தான் வந்து தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சு, இந்த இடத்துக்கு வந்திருக்காங்க, அப்படிங்கிறதை வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் இருக்கும், அதுல அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும், அதெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும்” என்றார்.

