‘மண்டாடி’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஹாஸ், ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சஞ்சனா, தணிகல பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா எழுதி இயக்குகிறார். இது, அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரித் ராம்நாத் இசை அமைக்கிறார்.
தமிழ், மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ள ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோவின் கார்த்திகேயன் சந்தானம் இப்படம் மூலம் தெலுங்குக்கு சென்றுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று சந்திக்கும் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘நெசவாளர் புடவையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் புடவை தனக்குரிய பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறது’ என்ற சுவாரஸியமான கருத்துடனும் முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பும் என இந்த புரமோ டீஸர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

