இந்தியாவில் முதல் முறையாக, முதன்மை கதாபாத்திரத்தில் கொரில்லா நடிக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதை அறிமுக இயக்குநர் மைக்கேல் மிலன் இயக்கி வருகிறார். இவர், செல்வராகவன், சரண், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் காசி விஸ்வநாதன், சுப்ரமணி இணைந்து தயாரிக்கின்றனர். நாயகியாக அஞ்சலி நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் தியான் சீனிவாசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.
அருண்பாண்டியன், கருணாகரன், சிங்கம் புலி, மீரா வாசுதேவன், சூப்பர் சுப்ராயன், மொட்டை ராஜேந்திரன், அருவி மதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி மைக்கேல் மிலன் கூறும்போது, “இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி. விலங்குகள் நடித்து பல திரைப்படஙகள் வெளிவந்திருந்தாலும் விலங்குகளை முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்து உருவாகும் படம் இதுதான். தாய்மை அடைந்திருக்கும் ஒரு கொரில்லா, உகாண்டாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுகிறது. சில சூழல்களால் அது காட்டுக்குள் தப்பிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
அதே போல தாய்மை அடைந்திருக்கும் நாயகியும் அதே காட்டுக்குள் மறைய வேண்டிய சூழல். ஏன், எதற்கு என்பது சுவாரஸியமான திரைக்கதை. அம்மா சென்டிமென்ட் கதை. ஆனால் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதமாகவும் இதை உருவாக்கி இருக்கிறோம்.
அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் கொரில்லாவை உருவாக்கி, மும்பையில் டெஸ்ட் ஷூட் செய்தோம். அது சரியாக வரவில்லை என்பதால் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாக்கி இருக்கிறோம். நாங்களே ஒரு கொரில்லாவை உருவாக்கி படமாக்கியுள்ளோம். 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சில காட்சிகளைப் படமாக்குவதற்காக விரைவில் உகாண்டா செல்ல இருக்கிறோம். அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் பண்ணும் திட்டம் இருக்கிறது” என்றார்.

