தமிழகத்தில் அக்.17-ம் தேதி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை 20 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த ஏப்ரல் முதலே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்த்தேக்கங்கள், ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கனஅடி.
ஆனால் தற்போது 4,730 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 35.77 சதவீதம் ஆகும். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நீர் தேவையை பூர்த்தி செய்ய வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை விலகி வருகிறது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் விலகிவிட்டது. தற்போது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விலகி வருகிறது. அதைத் தொடர்ந்து, அக்.17-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: அந்தமான் கடல் பகுதியில் அக்.11-ம் தேதி (நாளை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதற்கடுத்து வரும் 4 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்கும். இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டு, பின்னர் 17-ம் தேதி வடகிழக்கில் இருந்து தமிழகம் நோக்கி காற்று வீசும். அதுமுதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

