கர்நாடக அரசு மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அமைச்சர் பேசியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு இத்திட்டத்தை முறியடிக்க உச்ச நீதிமன்ற வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலம் மண்டியாவில் நேற்று அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி, “மேகேதாட்டுவில் புதிய அணையை கட்டுவதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படாது. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துக்குள் மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.
இதுதான் கர்நாடக அரசின் உறுதியான முடிவு. முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளும் நிறைவடைந்துவிட்டன.
மத்திய நீர்வள ஆணையத்திடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.“ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு தான் அனுமதி தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தொடர்ந்து கூறி வருகிறார். தமிழகம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக மேகேதாட்டு அணையை எதிர்த்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் எங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை பெற்றுள்ளன. அவர்கள் அதனை ஆய்வு செய்வார்கள். இந்த விவகாரம் இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழக அரசின் அனுமதி தேவையில்லை, என்றும் கர்நாடக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஜல் சக்தித்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி , காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதில் முனைப்பாக இருப்பதை காணும் போது ஒன்றிய பாஜக அரசு மறைமுகமான அனுமதியை வழங்கி உள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடவில்லை. இந்த சூழலில், மேகேதாட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் ஜூன் 19ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எனவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வஞ்சகமான முறையில் கர்நாடக அரசுக்கு துணை போகும் ஒன்றிய அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

