“ஜிஎஸ்டி வருவாய் தொடர் வீழ்ச்சி; தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

Priya
588 Views
1 Min Read

“தமிழக பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடர்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வெற்றுப் பேச்சுக்களாலும் சமூக வலைதளப் புகழ்ச்சிகளாலும் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்திவிட முடியாது என்பதை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக நிரூபித்துவிட்டன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த 2026-ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களாகவே (ஜூலை -1%, ஆகஸ்ட் -1%, செப்டம்பர் -5%) தமிழ்நாடு தொடர்ந்து வரி வருவாய் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. உத்தரப் பிரதேசம் (18%), குஜராத் (17%), கர்நாடகா (16%), மகாராஷ்டிரா (15%) எனப் பிற முக்கிய மாநிலங்கள் கடந்த ஆண்டை விட அபார வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தவெக ஆட்சியில் தமிழ்நாடு மட்டும் தொடர்ச்சியாக 3 மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து அதலபாதாளத்திற்கு சரிந்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

தொழில்துறையையும் வர்த்தகத்தையும் வழிநடத்தத் தெரியாத முதல்வர் விஜய்யின் அனுபவமின்மையே இந்தத் தொடர் ஜி.எஸ்.டி வீழ்ச்சிக்கு நேரடிக் காரணம். அரசுக்கு வருமானத்தை ஈட்டவும், நிதி நிர்வாகத்தைச் சரியாகக் கையாளவும் திறனில்லை; மாறாக, கவர்ச்சி அறிவிப்புகளையும், சினிமாப் பாணி விளம்பரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தையே முடக்கிப்போடும் இந்த மோசமான ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, மாநிலப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடர்ந்து 3 மாதங்களாக ஜி.எஸ்.டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். வெற்று முழக்கங்களால் நிதி நெருக்கடியை இனியும் மறைக்க முடியாது; முதலமைச்சர் விஜய் உடனடியாக நிதி நிர்வாகத்தைச் சீரமைக்காவிட்டால், இந்தச் சீர்கேட்டிற்கு மக்கள் மன்றத்தில் தவெக அரசு கடுமையான பாடத்தைக் கற்க நேரிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply