“தவெக அரசின் 6 மாத ஆட்சி மக்கள் விரும்பும் திசையில் செல்லவில்லை” – மு.வீரபாண்டியன் விமர்சனம்

Priya
969 Views
2 Min Read

“தவெக அரசின் 6 மாத கால ஆட்சி மக்கள் விரும்பும் திசையில் செல்லவில்லை. மாநில உரிமைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஆகியவை குறித்துத் தமிழக முதல்வர் வாய் திறந்து பேச வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “உச்ச நீதிமன்றக் கிளையைத் தமிழகத்தில் தொடங்க வேண்டும்.

பிரதமர் மோடியை அருகில் வைத்துக்கொண்டு கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், “மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவேன்” என்று பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பிரதமரை சந்திப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்துக்கான உரிய நிதியைப் பெற்று வர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டத்தின்போது அவர்கள் மீது போடப்பட்ட 90 ஆயிரம் வழக்குகள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

திருச்சி மாநகரக் காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. அதனை உடனடியாக நிரப்பி, மாநகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலைவாசி உயர்வை தடுக்கவேண்டும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க வேண்டும்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தியும், ‘மாற்றம் அவசியம்’ என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

நதிநீர் இணைப்பு, ஆறுகளை பாதுகாப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை. மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக நதிநீர் இணைப்புக்கு போதிய நிதி ஒதுக்கி நதிகளை இணைக்க, ஆறுகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தாலும் கட்சிப் பிரமுகர்கள் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் மதச்சார்பற்றது. நீதிபதி மதச்சார்பின்றி நடந்து கொள்ள வேண்டும்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பொதுவெளியில், பொதுவாழ்வில் உள்ள சு.வெங்கடேசன் பற்றி விமர்சனம் செய்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆறு மாதத்தில் தமிழக மக்கள் விரும்பும் திசையில் தவெக அரசு செல்லவில்லை.

ஆறு மாத கால அனுபவத்தின் மூலம் பாடங்களைக் கற்றுக்கொண்டு மக்கள் விரும்பும் வகையில் தவெக அரசு ஆட்சி செய்ய வேண்டும். மாநில உரிமைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஆகியவை குறித்துத் தமிழக முதல்வர் வாய் திறந்து பேச வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply