10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் சீமா குமாரி
ஆசிய விளையாட்டு போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் சீமா குமாரி பந்தய தூரத்தை 32:50.05 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
பக்ரைனின் யாவி வின்ஃபிரெட் (32:39.18) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஜப்பானின் தனகா நோஸோமி (32:41.54) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 16 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ப்ரீஜா ஸ்ரீதரன் தங்கப் பதக்கமும், கவிதா ரவுத் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தனர்.
வித்யா ராம்ராஜ், விஷாலுக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை
தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஆசிய விளையாட்டுப்போட்டியில், கலப்பு தொடர் ஓட்டப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்க வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.
Advertisement
குத்துச்சண்டையில் சுமித் விலகல்
ஆடவருக்கான குத்துச்சண்டை 70 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சுமித், ஈராக்கின் அல் சர்ரே அலி காசிம் ஹம்தானுடன் மோதினார். முதல் 2 சுற்றுகளில் சுமித் முன்னிலையில் இருந்தார்.
3-வது சுற்றில் எதிராளியிடம் இருந்து குத்து வாங்கிய சுமித் கீழே விழுந்தார். அப்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து நடுவர் போட்டியை நிறுத்திவிட்டு, அல் சர்ரே அலி காசிம் ஹம்தான் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
டேபிள் டென்னிஸில் இந்திய ஜோடிகள் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடி 11-5, 11-4, 12-10 என்ற செட் கணக்கில் மங்கோலியாவின் புரெஞ்சர்கல் சஞ்சா, போலோர்-எர்டீன் பாட்முங்க் ஜோடியையும் யஷஸ்வி கோர்படே, தியா சித்தலே ஜோடி 11-2, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் ஈரானின் செதயேஷ் இலுகானி, மஹ்ஷித் அஷ்டாரி ஜோடியையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பதக்கத்தை நழுவவிட்ட ஆஷா இளங்கோ
மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் உஸ்பெகிஸ்தானின் டாவ்ரோனோவா ஷரிஃபா 14.35 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹுவாங் யிங்யிங் (14.12) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு சீன வீராங்கனையான லி யி 13.83 மீட்டர் தூரம் தாண்டினார். அதேவேளையில் இந்தியாவின் ஆஷா இளங்கோவும் 13.83 தூரம் தாண்டினார்.
இருவரும் சம அளவிலான தூரத்தை தாண்டிய போதிலும் லி யி-க்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. ஏனெனில் ஆஷா இளங்கோ இரண்டாவது சிறந்த முயற்சியாக 13.65 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார். அதேவேளையில் லி யி 13.79 மீட்டர் தூரம் தாண்டியிருந்தார். இதனால் கவுண்ட்பேக் முறையில் ஆஷா இளங்கோ வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார்.
பிரணதி நாயக் 6-வது இடம்
மகளிருக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரணதி நாயக் 13.100 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். கொரியாவின் யோ சியோஜெங் (14.100) தங்கப் பதக்கத்தையும், வடகொரியாவின் அன் சாங் லோக் (13.033), வெ சியு (12.800) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
அரை இறுதியில் இந்திய கபடி அணிகள்
ஆசிய விளையாட்டில் கபடியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவுடன் மோதியது. இதில் இந்திய ஆடவர் அணி 37–21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இது தொடர்ச்சியான 4-வது வெற்றியாக அமைந்தது. தென் கொரியா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய அணிகளையும் இந்தியா வென்றிருந்தது. இந்த வெற்றிகளின் மூலம் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி. மகளிருக்கான கபடியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 50-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஸ்குவாஷ் கால் இறுதியில் அனஹத் சிங்
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங், தன்வி கன்னா ஆகியோரும் ஆடவர் பிரிவில் அபய் சிங், வீர் சோட்ரானி ஆகியோரும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில் குமார் ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
பவானி தேவி தோல்வி
வாள்வீச்சில் மகளிருக்கான தனிநபர் சேபர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி 15-8 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஊலன் துக்ஸ்ஜர்கானை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பவானி தேவி 5-15 என்ற கணக்கில் சீனாவின் ராவ் சூயி-யிடம் தோல்வி அடைந்தார். பவானி தேவி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரேயா குப்தா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 6-15 என்ற கணக்கில் கொரியாவின் ஜியோன் ஹாயோங்கிடம் வீழ்ந்தார்.
ஆடவர் ஹாக்கியில் ஹாட்ரிக் வெற்றி
ககமிகஹாரா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் தில்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் (10, 26 மற்றும் 32-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். இந்த 3 கோல்களுமே ஃபீல்டு கோலாக அமைந்திருந்தது. அபிஷேக் 2 கோல்களும் (15, 38-வது நிமிடங்கள்), ஷில்லானந்த் லக்ரா (4-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (11-வது நிமிடம்), ரஜிந்தர் சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய ஆடவர் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவையும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 16-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை ஜப்பானுடன் மோதுகிறது.

