தவெக தலைவர் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகளு டனான 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செப்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்திவருகிறார்.
இந்நிலையில், கூட்டணியை வலுவாக உருவாக்க தவெக திட்டமிட்டு வருகிறது. இதற்கான கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் சென்னையில் செப்.9-ம் தேதி நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமைக் கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோரைச் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச்செயலாளர் வீரபாண்டியனை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் வீரபாண்டியன் கூறும்போது, ‘‘தவெக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில் நாங்கள் பங்கேற்க இயலாததால், முதல்வரைச் சந்தித்து தெளிவுபடுத்தினோம்.
இப்போதும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தற்போது வரை அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால் மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சி, தனது கருத்துகளை முன்வைக்கும்போது அதற்கு மதிப்பளித்து, எங்களது கட்சி தலைமையிடம் அதை தெரிவிப்போம்” என்றார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பதாக வைகோ உறுதியளித்துள்ள தாகக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் குழு தொடர்ந்து விசிக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர். இரண்டாவது முறையாக தோழமை கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் யார் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தவெக வட்டாரங்களில் பேசப் பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்கள்
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இச்சூழலில், கம்யூனிஸ்ட் தலைவர்களை நேற்று சந்தித்த அமைச்சர்கள் குழுவினர், ‘இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செய்த தவறுகள். அதற்காக அரசு சார்பில் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

