நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் அவர்களின் உயிரிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகரிப்பதாகவும், இதற்கு தீவிர சிகிச்சை தேவை என்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘நீரிழிவு நோய் ஆய்வு மற்றும் மருத்துவ நடைமுறை’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: புகைப்பிடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. 11.3 லட்சம் பேரை உள்ளடக்கிய 48 ஆய்வுகளின் பகுப்பாய்வு, புகைப்பிடிப்பவர்களுக்கு மரண அபாயம் 55 சதவீதம் அதிகம் இருப்பதைக் கண்டறிந்தது.
மேலும், சுமார் 1.3 லட்சம் நீரிழிவு நோயாளிகளை ஆய்வு செய்த மற்றொரு ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த மரண விகிதம் 48 சதவீதமும், இதய நோயால் ஏற்படும் மரண விகிதம் 36 சதவீதமும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் இந்திய நீரிழிவு நிபுணர் டாக்டர் அனூப் மிஸ்ரா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த 35 நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கூடிய பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
இதன்படி புகைப்பிடித்தல், நீரிழிவு நோயாளிகளிடம் சிறுநீரக பாதிப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆல்புமினூரியா மற்றும் நீரிழிவு காரணமான சிறுநீரக நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஜப்பானில் 2,490 டைப்-2 நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்சுலின் எதிர்ப்பு திறனும் அதிகரிப்பதையும், புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு அது குறைவதையும் கண்டறியப்பட்டது.
நீரிழிவு சிகிச்சையில் தற்போது புகைப்பிடிப்பதை நிறுத்துவது குறித்த ஆலோசனை பெரும்பாலும் குறுகிய அறிவுரைகளாகவே உள்ளன. எனவே, வழக்கமான புகைப்பிடிப்பதை மதிப்பீடு, செயலில் சிகிச்சை, உடல்நலக் கண்காணிப்பு மற்றும் மீண்டும் புகைப்பிடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவை நீரிழிவு பராமரிப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

