‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்தும், தமிழ் ரசிகர்களுடனான தங்களது எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “இங்கு நிற்பது எனக்கு மிகப் பெரிய பெருமை. யஷ்… நான் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான். முதலில் இப்படத்துக்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன்.
யஷ்ஷுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன்.
கீது மோகன்தாஸ் எனக்கு குடும்ப நண்பர் போன்றவர். இப்படத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.
நடிகை ருக்மிணி வசந்த், “வணக்கம் சென்னை. ‘டாக்ஸிக்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். யஷ், நீங்கள் பலருக்கும் ஓர் உத்வேகமாக இருக்கிறீர்கள். அதில் நானும் ஒருத்தி. உங்கள் ரசிகையாக இருந்த என்னுடைய பயணம், தற்போது உங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.
நடிகை ஹூமா குரேஷி பேசுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும், பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஓர் அங்கம்.
கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஓர் அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கான கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். இந்தப் பிரம்மாண்டமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்’’ என்றார்.
நடிகை கியாரா அத்வானி பேசுகையில், “சென்னைக்கு நான் வருவது இதுதான் முதல் முறை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது.
எங்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. அதைவிட முக்கியமாக, அவர் ஓர் அற்புதமான மனிதர்.
ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு யஷ் இந்திய சினிமாவை உலக அளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறுகையில், “எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அதே நிலை மீண்டும் தொடர்ந்தது.
ஆனால் இப்போது இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான யஷ் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யஷ்ஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது’’ என்றார்.
நடிகர் யஷ் பேசுகையில், “தமிழ் மக்களே… நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘கேஜிஃப்’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் மீது நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.
நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய விருந்தாக இருக்கும். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும்’’ என்று பேசினார்.
‘டாக்ஸிக்’ படத்தில் யஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி உள்ளார்.
ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ படம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கேவிஎன் புரடெகஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

