சட்டசபையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசி கொண்டிருக்கிறார்: முதல்வர் விஜய் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Priya
719 Views
4 Min Read

இப்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசி கொண்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. திமுகவின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்து கொள்வோம். அந்த வகையில் திமுகவின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்யவிருக்கிறோம்.

கடுமையானதாகத்தான் இருக்கும்; சிலருக்கு கசப்பானதாகவும் இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த மாறுதல்கள் அடுத்த நூறாண்டுக்கு கழகம் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும். இனி வரும் நிர்வாகிகளுக்கு, அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக்காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்க போகிறோம். விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நாம் தொடங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேர்மையானதாக – உண்மையானதாக அமைய வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவோம்.

தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள். நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும். எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்சி சீரமைப்புகளை செய்ய வேண்டும். அதற்கு முதலில் நமக்கு மனமாற்றம் வர வேண்டியது அவசியம். மாறுதலுக்கு தயார் ஆகாமல் வெற்றி பெற முடியாது. என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை கோட்பாட்டில், உழைப்பில் உறுதியில், போராட்ட குணத்தில் வலிமையாக இருக்கிறவர்கள் கூட நிர்வாகிகளை அரவணைப்பதில் சறுக்கி விடுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களை பார்த்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களை பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களை பார்த்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களை பார்த்தால் வணங்குவது இல்லை.

தனக்கு இணையாக யாரும் வளர கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஒரு மாவட்ட செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு எம்எல்ஏ மட்டுமே வலிமையாக இருந்தால் அந்த தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும். படைக்கு இளையோர் வரும்போது, அவர்களை மூத்தோர் வரவேற்று வழி நடத்துவதுதான் வலுவான படைக்கு அடையாளம். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் – போராட்டம் நடத்தாமல்-கொள்கை இல்லாமல்-நிர்வாக கட்டமைப்பு இல்லாமல்-ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது-ஆகிடவும் கூடாது! அது போன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது.

நாம் நிரந்தரம்! நாம் போர் அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை. போராட வந்தவர்கள். வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்க போவது இல்லை. ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும் வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். எதிர்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல், மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் கட்சி திமுக என நம் எதிரிகளே சொல்வார்கள். கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்! சிறப்பாக கொடுப்போம். கடந்த முறை வென்ற பிறகு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நல்லாட்சி கொடுப்போம் என சொன்னோம்; அதை செய்தும் காட்டினோம். இப்போது தோற்ற பிறகும் நான் சொல்கிறேன், நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராட போகிறோம். அவர்களின் நலனுக்கும் துணைநிக்க போகிறோம்.

நம் கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். நம் பிள்ளைகள், நம் உறவினர்களிடம் முதலில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். நம் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வாக்குகளை முழுமையாக வாங்க வேண்டும். இப்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசி கொண்டிருக்கிறார். நம்மை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம்.

இனமும் – மொழியும் – நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும். அப்படி, உழைக்க தேவையான உடன்பிறப்புகளை கழகத்தில் அதிகம் சேர்க்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து உழைப்போம். அண்ணா உருவாக்கிய இயக்கத்தை – தமிழின தலைவர் கலைஞர் வளர்த்த இயக்கத்தை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply