மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆக.14-ம் தேதி மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆக.12, 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.15-ம் தேதி முதல் ஆக.17-ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆக.14-ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் (ஆக.11,12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆக.12-ம் தேதி வரையும், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆக.15-ம் தேதி வரையும், தென் மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதியில் ஆக.15-ம் தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் ஆக.15-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மேல் குறிப்பிட்டுள்ள தேதிகள் வரை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மழைப் பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, அரியலூர் மாவட்டம் செந்துறை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 9 செ.மீ. மழையும், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாட்டில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

