‘‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்து, படிப்புக்கான முழு செலவையும் அரசு ஏற்பதாக அறிவித்தது.
இதனால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, இந்த இடஒதுக்கீட்டின் மூலம் கடந்த 2020-21-ம் ஆண்டில் 435 பேர், 2021-22-ல் 555 பேர், 2022-23-ல் 584 பேர், 2023-24-ம் ஆண்டில் 625 பேர், 2024-25-ம் ஆண்டு 625 பேர், 2025-26-ம் ஆண்டில் 630-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இடஒதுக்கீட்டை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறும்போது, ‘‘7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

