சென்னை, மதுரை, கடலூர், திருவள்ளூர், கன்னியாகுமரியில் வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள குடியிருப்புகளுக்கான விருப்பம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சுயநிதி திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மானியக் கோரிக்கை கூட்டத் தொடரின் போது அறிவிக்கப்பட்டது.
இதன்படி சென்னை – அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் – குண்டுசாலை, மதுரை – எல்லீஸ் நகர், திருவள்ளூர் – திருமழிசை, கன்னியாகுமரி – வல்லன்குமாரவில்லை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.
இத்திட்டங்களை திட்டமிடும் முன், பொதுமக்களின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள் கட்ட, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) ஒரு பிரத்யேக இயங்குதளத்தை (Portal) உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் தங்களின் விருப்ப இடம், குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகளை பதிவு செய்யலாம். பெறப்படும் இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான முன்னுரிமையாக கருதப்படாது.
என்றாலும் மேற்படி மதிப்பீட்டுப் பதிவை வெற்றிகரமாக பதிவு செய்தவர்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்கான தேதி, விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த எண்ணுக்கு தெரிவிக்கப்படும்.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகள் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையதளத்தில் (https://tnhb.tn.gov.in) தங்களின் விருப்பத்தை விரைவாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

