23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதலில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரரான ராஜா முத்துப்பாண்டி ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ எடையையும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 160 கிலோ எடையும் என ஒட்டுமொத்தமாக 286 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ராஜா முத்துப்பாண்டி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். மலேசியாவின் முகமது அஸ்னில் பின் பிதின் 299 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு 282 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி கூறும்போது, “நான் தங்கப் பதக்கம் வெல்வதற்காகவே இங்கு வந்திருந்தேன். ஆனால் திட்டமிட்டபடி எதுவும் அமையவில்லை. என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஆனால் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது” என்றார்.
ஞானேஷ்வரி யாதவ்
மகளிருக்கான பளுதூக்குதலில் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஞானேஷ்வரி யாதவ் ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 111 கிலோ எடையும் என ஒட்டுமொத்தமாக 199 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நைஜீரியாவின் ஓனோமே ஓமோலோலா 206 கிலோ (93 கிலோ + 113 கிலோ) எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ஞானேஷ்வரி யாதவ், சத்தீஸ்கரில் உள்ள போண்டியா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
நீளம் தாண்டுதல்
ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் எம்.ஸ்ரீசங்கர் 8.01 மீட்டர் நீளம் தாண்டி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 8 மீட்டருக்கு மேல் தாண்டும் வீரர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் அல்லது 12 சிறந்த வீரர்கள் இறுதிப் போட்டியில் நுழைய முடியும் என்பது விதியாகும். ‘ஏ’ பிரிவில் இருந்து 27 வயதாகும் ஸ்ரீசங்கர் மட்டுமே நேரடியாக தகுதி பெற்றார்.
குரூப் ‘பி’ தகுதி சுற்றில் மற்றொரு இந்திய வீரரான சத்யநாதன் 7.77 மீட்டர் நீளம் தாண்டி 4-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் ஜமைக்காவின் தாஜே கேல் 8.10 மீட்டர் நீளமும், உரோய் ரயான் 8.04 மீட்டர் நீளமும் தாண்டி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.
தடை தாண்டும் ஓட்டம்
ஆடவருக்கான 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் தகுதி சுற்றில் இந்திய வீரர் தேஜஸ் ஷிர்சே 13.76 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்டுமொத்தமாக 6-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் தேஜஸ் ஷிர்சே.
குரிந்தர்வீர் சிங் ஏமாற்றம்
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்ட தகுதி சுற்றில் இந்தியாவின் குரிந்தர்வீர் சிங் பந்தய தூரத்தை 10.39 விநாடிகளில் கடந்து ஒட்டுமொத்தமாக 28-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இறுதிப் போட்டியில் சஜன் பிரகாஷ்
நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 1:58.59 விநாடிகளில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தமாக 6-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நீச்சலில் 6-வது இடம்
நீச்சலில் ஆடவருக்கான 4×200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தக் ஷன் சசிகுமார், அனீஷ் சுனில்குமார் கவுடா, ஆர்யன் நெஹ்ரா, ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 7:29.84 விநாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. ஆஸ்திரேலியா (7:01.47) தங்கப் பதக்கமும், இங்கிலாந்து (7:04.98) வெள்ளிப் பதக்கமும், வேல்ஸ் (7:09.59) வெண்கலப் பதக்கமும் வென்றன.
சமந்தா 7-வது இடம்
ஜிம்னாஸ்டிக்கில் மகளிருக்கான வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் புரோதிஷ்தா சமந்தா 12.883 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தனது சமூக வலைத்தள பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கால் இறுதியில் ஜதுமணி
ஆடவருக்கான குத்துச்சண்டையில் 55 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஜதுமணி மன்டெங்பாம், பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானுடன் மோதினார். இதில் ராணுவ வீரரான ஜதுமணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார், மலாவியின் டெபோரா எம்டெஞ்சேவை எதிர்த்து விளையாடினார்.
இதில் பிரீத்தி பவார், ‘ரெப்ஃரீ ஸ்டாப் கான்டெஸ்ட்’ வாயிலாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். டெபோரா எம்டெஞ்சே, இரண்டு முறை ‘ஸ்டாண்டிங் கவுண்ட்’ எச்சரிக்கைகளைப் பெற்றார். இதனால் 2-வது ரவுண்டில் 47 விநாடிகள் மீதமிருந்த நிலையில் நடுவர் போட்டியை நிறுத்தி, பிரீத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தார். கால் இறுதி சுற்றில் ஜதுமணியும், பிரீத்தியும் வெற்றி பெற்றால் குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்வார்கள்.
ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆதித்யா பிரதாப் 2-3 என்ற கணக்கில் உகாண்டாவின் நுஹு பாட்டேவிடம் தோல்வி அடைந்தார். ஆடவருக்கான 60 கிலோ எடைப் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தின் வில்லியம் ஹெவிட்டை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சோனோவால் தோல்வி
லான் பவுல் விளையாட்டில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியாவின் பிங்கி சிங், ரூபா ராணி திர்கே ஜோடி தங்களது கடைசி குரூப் ஆட்டத்தில் இங்கிலாந்து ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த மோதல் 1-1 சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற டை பிரேக்கரில் இந்திய ஜோடி தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் புதுல் சோனோவால் தனது கடைசி குரூப் ஆட்டத்தில் 0.5-1.5 என்ற கணக்கில் மால்டாவின் ஷான் ஜேம்ஸ் பார்னிஷிடம் தோல்வி அடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

