“இந்தியா உடனான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது” – ஜப்பான் பிரதமர்

Priya
34 Views
1 Min Read

சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை உள்ள நிலையில், இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய பயணத்துக்கு முன்பாக டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய தகாய்ச்சி, “சர்வதேச சூழலில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை விழுமியங்களையும் நட்புறவின் நலன்களையும் பகிர்ந்துகொள்ளும் இந்தியா உடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சர்வதேச நிலையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியுடன் உறுதியான ஒத்துழைப்பை முன்னெடுக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

ஜப்பான் – இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துதல், பொருளாதாரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், முதலீடு மற்றும் புத்தாக்கத்தை நோக்கி இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகிய மூன்று அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த எனது பயணம் இருக்கும்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய வணிகச் சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் ஜப்பான் – இந்தியா பொருளாதார மன்றத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அரசு மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஜப்பான் – இந்தியா இடையிலான ஒத்துழைப்பின் வரம்பை விரிவுபடுத்தவும், வலுவான பொருளாதாரத்தை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஆசியாவின் முக்கிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, ஜப்பானைப் போலவே இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் பொறுப்பு வகிக்கிறது. அந்த வகையில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பை உள்ளடக்கிய சுதந்திரமான, திறந்த இந்தோ – பசிபிக் எனும் நோக்கத்தை நனவாக்குவதற்கான முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளேன்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதால், அவருடனான தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே நான் இதைக் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply