“தேசிய நலன்களைக் காப்பதில் முழு தயார் நிலையில் ராணுவம்” – புதிய தளபதி தீரஜ் சேத்

Priya
38 Views
2 Min Read

“தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது. அது எப்போதும் அவ்வாறே இருக்கும் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்“ என்று நாட்டின் புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற தீரஜ் சேத் தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளப​தி​ ஜெனரல் உபேந்​திர திவிவேதி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 31-வது ராணுவ தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று முறைப்படி பொறுப்பேற்றார். இதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீரஜ் சேத், “போர்க்கள அனுபவம் மிக்க ஒரு வலிமையான படை நமது ராணுவம். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள அது எப்போதும் தயாராகவும் திறனுடனும் உள்ளது. மாறிவரும் பாதுகாப்புச் சூழலின் சவால்களை எதிர்கொள்ள, புதிய உற்சாகத்துடனும் உறுதியான நோக்குடனும் ராணுவத்தின் நவீனமயமாக்கல் பணிகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தொழில்நுட்ப வசதி கொண்ட எதிர்காலத் தேவைகளுக்குத் தயாரான, அனைத்து வகையிலும் வலுவான, பல்வேறு தளங்களில் செயல்படக்கூடிய ஒரு ராணுவத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்த நோக்கங்களை மனதில் கொண்டும், மாற்றத்துக்கான தசாப்தம் (மாற்றத்துக்கான 10 ஆண்டுகள்) என்ற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய வழிகாட்டுதல்களில் இருந்து உத்வேகம் பெற்றும், எனது கவனத்துக்குரிய முக்கிய பகுதிகளை நான் அடையாளம் கண்டுள்ளேன். அவற்றை விஜய் (VIJAY) என்ற சுருக்கப் பெயரின் கீழ் ஒருங்கிணைத்துள்ளேன். VIJAY என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் எனது முன்னுரிமைகளில் ஒன்றைக் குறிக்கிறது.

V என்பது Vigilance அதாவது விழிப்புணர்வைக் குறிக்கிறது. எல்லைகள் மற்றும் உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம். I என்பது Innovation அதாவது புதுமையை குறிக்கிறது. கோட்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் புதுமைகளைப் புகுத்துவதிலேயே எனது கவனம் இருக்கும். J என்பது Jointness என்பதைக் குறிக்கும். ஆதாவது, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த விமானப்படை மற்றும் கடற்படையுடன் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றம் கூட்டுச் செயல்பாட்டை நாங்கள் தொடர்ந்து பேணுவோம். A என்பது Atmanirbhar அதாவது தன்னிறைவைக் குறிக்கிறது. உள்பாட்டுத் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாங்கள் ஒரு தன்னிறைவு பெற்ற ராணுவத்தை உருவாக்குவோம். Y என்பது Yoddha First அதாவது வீரரே முதன்மை என்பதைக் குறிக்கிறது. எனது வரையறையின்படி, அக்னிவீரர் முதல் மிக மூத்த முன்னாள் ராணுவ வீரர் வரை அனைவரையும் உள்ளடக்கியது இது.

இந்த நல்ல நாளில், ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் எனது முன்னாள் ராணுவத் தளபதிகள் அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் தலைமையும்தான் இந்திய ராணுவத்தை ஒரு வலிமையான, உறுதியான, நம்பகமான சக்தியாக நிலைநிறுத்தியுள்ளன. நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய நலன் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதையும் அது எப்போதும் அவ்வாறே இருக்கும் என்பதையும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply