கோடம்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, 7 நாட்களில் கடை மாற்றப்படும் என, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதியளித்தார்.
சென்னை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதியில் புளியூர் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை எண்.405 அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் வீடுகள் இருப்பதால், அதிகப்படியான மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
மேலும், இந்த சாலையில் பள்ளிக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையமும் இருப்பதாகவும், டாஸ்மாக் கடை காரணமாக பள்ளி மாணவர்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை தலைவருமான ஜே.சி.டி.பிரபாகர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கடை பள்ளிக்கூடத்துக்கு அருகிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இடையூறாக இருப்பதாக கூறி பல ஆண்டுகளாக இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், முந்தைய அரசுகள் இதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற காரணத்தால் மக்கள் நேரடியாக போராட்டத்துக்கு வந்து விட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மக்கள் என்னிடம் மனு கொடுத்திருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பேன். இந்த விவகாரம் குறித்து டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இன்னும் 7 நாட்களில் இந்த கடை மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

