இந்திய ரயில்வேயின் வருவாயைப் பெருக்கவும், கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதைக் குறைக்கவும் புதிய விதிமுறைகள் இன்று (ஏப்ரல் 1, 2026) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இனி ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது கால நேரத்தைப் பொறுத்து பிடித்தம் செய்யப்படும் தொகையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய கட்டணப் பிடித்தம் மற்றும் கால அளவு:
பயணிகள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது, கீழ்க்கண்ட புதிய விதிகளின் அடிப்படையில் பணம் திரும்ப (Refund) வழங்கப்படும்:
- 72 மணி நேரத்திற்கு முன்பு (3 நாட்கள்): ரயில் புறப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே, ரத்துக் கட்டணம் (Cancellation Charges) போக மீதமுள்ள முழுத் தொகையும் திரும்பக் கிடைக்கும்.
- 24 மணி நேரத்திற்கு முன்பு: ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால், கட்டணத்தில் 75% மட்டுமே திரும்பப் பெற முடியும் (25% பிடித்தம் செய்யப்படும்).
- 8 மணி நேரத்திற்கு முன்பு: ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால், வெறும் 50% கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும்.
- 8 மணி நேரத்திற்குள்: ரயில் புறப்பட 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும்போது டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு ரூபாய் கூடத் திரும்பக் கிடைக்காது.
ஏன் இந்த மாற்றம்?
ரயில் பயண அட்டவணை (Chart Preparation) தயாரிக்கப்படும் நேர மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பலர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்வதால் மற்ற பயணிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்கவும், திட்டமிட்ட பயணங்களை ஊக்குவிக்கவும் இந்த Railway Cancellation Rules அமல்படுத்தப்பட்டுள்ளது.

