HEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “நீ Forever”.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தருணம்’ என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் சுதர்ஷன் கோவிந்த்,
“எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் வெற்றி பெறாத ஒவ்வொருக்கும் ஒரு நாள் வாய்ப்பு வந்து சேரும். நாம் செய்யும் வேலையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு “நீ Forever” படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. சினிமாவில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறோம்; நான் மட்டும் சிறப்பானவன் இல்லை, விடாமுயற்சி செய்த ஒரு சாதாரண மனிதன் தான். 2024 பிப்ரவரியில் இந்த பயணம் தொடங்கியது. வேலைக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது ஒரு அழைப்பு வந்தது. ஒரு தயாரிப்பாளர் புதிய முகத்தைக் தேடுகிறார் என்று கூறினார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் விவரத்தை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் காட்டிய கவுதம் அண்ணாவுக்கு நன்றி.
முதல் முறையாக தயாரிப்பாளர் நேரடியாக அழைத்த போது அது யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையான வாய்ப்பாக மாறியது. சென்னை வந்து கதை கேட்டேன், மிகவும் பிடித்தது. நான் செய்த ஒரு சிறிய வீடியோவிலிருந்தே என்னை தேர்வு செய்தார்கள். பின்னர் என்னை கதாபாத்திரத்திற்காக தயாரித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா சிரித்தார். ஆனால் இந்த குழுவே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வாய்ப்பை அளித்த புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சி இருந்தால் ஒரு நாள் வாழ்க்கை நமக்காக சிரிக்கும். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
தொடர்ந்து பேசிய நடிகை அர்ச்சனா ரவி,
“இந்த படம் எனக்கு ஒரு கனவு மாதிரி. இந்த கதையை முதன்முதலில் கேட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. பாடல்கள், காட்சிகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தது. இயக்குநர் அசோக் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் கொடுத்து, என்னை இன்னும் நன்றாக நடிக்கத் தூண்டினார். படப்பிடிப்பில் நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தது, குறிப்பாக சுதர்ஷனுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் புகழ் சார் மற்றும் ஈடன் மேம் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து, சுதந்திரமாக வேலை செய்ய வைத்தார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்தது ஒரு நல்ல அனுபவம். குறிப்பாக சினேகா எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை கடந்து உருவான இந்த படம், மார்ச் 27 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

