நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (அக்.23) மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை (அக்.23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.23) கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் அக்.26-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசத்தில் 15 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 13 செமீ, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 12 செமீ, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், செட்டிகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

