அக்.15-ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை, கோவை, நீலகிரி, திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (அக்.14) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.15-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்.16-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்.17-ம் தேதி திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்.18-ம் தேதி திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
அக்.19-ம் தேதி திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்.15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை (அக்.13, 14) இரு தினங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தை வளம்செழிக்க செய்யும் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்.2-வது அல்லது 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்குவதற்கான சாதகமானச் சூழல் நிலவுகிறது.
ஏனெனில், அடுத்த 2 நாட்களில், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது, அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

