வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Priya
966 Views
2 Min Read

தமிழகத்தில் நாளை (ஆக.29) முதல் செப்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.29) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆக.30, 31 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்.1-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்.2, 3 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஆக.29) முதல் செப்.1-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு:

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் நீலாறு கீழ் அணையில் 3 செ.மீ, சேலம் மாவட்டம் கடத்தூர் அக்ரஹாரம், பனைமரத்துப்பட்டியில் தலா 2 செ.மீ, மதுரை மாவட்டம் கல்லந்திரி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply