சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு

Priya
25 Views
1 Min Read

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மே 1-ஆம் தேதி முதல் மே 5-ஆம் தேதி வரை தலைநகர் சென்னையில் வெப்ப அலை (Heatwave) வீசக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman) எச்சரித்துள்ளார். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் இந்தக் கடும் வெப்பத்திற்கு எல் நினோ (El Nino) காரணம் அல்ல என்று விளக்கியுள்ள அவர், வளிமண்டல உயர் அழுத்த மண்டலம் மற்றும் மேகங்களற்ற தெளிவான வானம் காரணமாகச் சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்குவதே இதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக வேலூர் போன்ற ஆந்திர எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும். மே 5-ஆம் தேதிக்குப் பிறகு வெப்பநிலை படிப்படியாக 3°C முதல் 4°C வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட தமிழகம் வெயிலில் வாடினாலும், அதே சமயம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது. மே 1 அல்லது 2-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும், போதிய நீர்ச்சத்து எடுத்துக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply