சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 பேருக்கு, ரூ.42 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நல அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு ரூ.42,21,900 மதிப்பிலான உதவித்தொகையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களால் வழங்கப்படும் விரிவான நலத்திட்டங்களில், திருமண உதவி, மகப்பேறு உதவி, குழந்தைகளின் கல்வி உதவி, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவி, மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண உதவி, பணியிட விபத்து மரண உதவி மற்றும் விபத்து ஊனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மூலம் பதிவு, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் கடந்த மே 10 முதல் செப்டம்பர் 30 வரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 840 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
6 லட்சத்து 88 ஆயிரத்து 674 தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.688 கோடியே 8 லட்சத்து 51 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 88 ஆயிரத்து 296 ஓய்வூதியதாரர்கள் மாதம்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் கொ. வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் மா. வள்ளலார் மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

