தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்படலாம்.! ஒன்றிய மின்துறை தகவல்

Priya
26 Views
1 Min Read

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே மாதம் முதல் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய மின்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் மின் நுகர்வு குறித்து மத்திய அரசு நடத்திய ஆய்வில், மின்தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய மின்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தென்மாநிலங்களின் ஒட்டுமொத்த தினசரி மின்தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தின் தேவை மட்டும் 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்டாகக் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் புதுச்சேரியில் மட்டும் மின்தேவை 483 மெகாவாட்டிலிருந்து 476 மெகாவாட்டாகச் சற்று குறைந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் கோடை வெப்பத்தைத் தணிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஏசி (AC) பயன்பாடு அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகம் ஆண்டுதோறும் 5 முதல் 8 லட்சம் புதிய மின் நுகர்வோரைச் சேர்த்து வரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த ஆற்றல் தேவை 89 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2026-27-ல் 1.48 லட்சம் மில்லியன் யூனிட்டாக (MU) இருக்கும் தேவை, 2035-36-க்குள் 2.80 லட்சம் மில்லியன் யூனிட்டாக உயரும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலைச் சமாளிக்க, தமிழக அரசு முன்கூட்டியே மின்தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு, பற்றாக்குறையைத் தவிர்க்கத் தேவையான அளவு மின்கொள்முதல் (Power Purchase) நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் தீவிரமடையும் என்பதால், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது தமிழக மின்வாரியத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply