19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி

Priya
582 Views
1 Min Read

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 19-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.

ஜப்பான் ஐச்சி, நகோயா மாகாணத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காகாமிகாஹாரா மைதானத்தில் நடைபெற்ற பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின.

அனுபவமிக்க இந்திய வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தின் முன்பு, உஸ்பெகிஸ்தான் வீராங்கனைகளின் செயல்திறன் எடுபடாமல் போனது.

இந்திய அணி வீராங்கனைகள் தீபிகா ஷெராவத் 8 கோல்களும், இஷிகா சவுத்ரி 3 கோல்களும், நவ்நீத் கவுர், லால்தந்த்லுவாங்கி ஆகியோர் தலா 2 கோல்களும், லால்ரேசியாமி, பல்ஜீத் கவுர், நேஹா, சாக்சி ராணா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்தியா, தனது அடுத்த லீக் போட்டியில் இந்தோனேசியாவை இன்று எதிர்கொள்கிறது.

ஆடவர் ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பிரிவு ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

ஜப்பானின் காகாமிகாஹாராவிலுள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும், இந்தோனேஷியாவும் மோதின. இதில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

இந்திய அணியின் ஸ்டிரைக்கர் தில்பிரீத் சிங் 4 கோல்களும்(18, 19, 37, 47-வது நிமிடங்கள்), ஷிலானந்த் லக்ரா (6, 35-வது நிமிடங்கள்), சுக்ஜீத் சிங் (38, 48-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும், அபிஷேக் (12-வது நிமிடம்), ரஜிந்தர் சிங் (19-வது நிமிடம்), மந்தீப் சிங் (21-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (28-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்தோனேஷியா அணிக்கான ஒரே ஒரு கோலை அவுலியா அல் அர்த் 33-வது நிமிடத்தில் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையுடன் வரும் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply