மூன்று நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Priya
998 Views
2 Min Read

நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களை, தங்களுக்கு வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையினை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி, இன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்கள். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000 புத்தகங்கள் என மொத்தம் 10,000 புத்தகங்களை ஸ்டாலின் இன்று (நவ.05) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் தனக்கு வரப்பெற்ற புத்தகங்களில் இதுவரை 7,10,000 (7 லட்சத்து 10 ஆயிரம்) புத்தகங்களை பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளார்.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, திமுக மூத்த உறுப்பினர் காசி மற்றும் அவரது குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் திமுகவினர், அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசியை சந்தித்தேன்.

பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாட சாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கருணாநிதியின் சிரிப்பைக் கண்டேன். கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் லட்சக் கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

உழைப்பாலும் தியாகத்தாலும் திமுகவை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கட்சித் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. அன்புநிறை காசியை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply