செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் செயல்பட்டு வரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த சேமிப்பு திட்டம் என்பதாலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் ஆகிய முக்கிய செலவுக்காகவும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வட்டி விகித முறையே 0.2 சதவீதம் மற்றும் 0.1 சதவீதம் உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது ;
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்து 8.2 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாண்டு வைப்பு திட்டத்தின் வருடாந்திர வட்டி விகிதம் 7சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் அதிகரித்து 7.1 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.இந்த வட்டி விகித மாற்றம் வரும் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து அமல்படுத்தப்படும். மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மே மாதம் முதல், கடனுக்கான வட்டி விகிதத்தை 2.5 முதல் 6.5 சதவீதம் வரை ரிசா்வ் வங்கி அதிகரித்த நிலையில், வைப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .