“கதர் ஆடைகளையும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் வாங்குவோம்” – முதல்வர் விஜய் வேண்டுகோள்

Priya
813 Views
1 Min Read

‘தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும்’ என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாள், நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், எளிமை, சுயநம்பிக்கை, உழைப்புக்கு மதிப்பு, அனைவரையும் அரவணைக்கும் மனிதநேயத்தையும் நினைவுகூரும் நாளாகத் திகழ்கிறது. அகிம்சை என்னும் ஆயுதத்தை ஏந்திய அண்ணல் காந்தியடிகள், இராட்டை என்னும் நூற்புச் சக்கரத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பொருளாதார சுதந்திரத்தையும், சுயசார்பையும் போதித்தார்.

ஒரு கதராடையை நாம் வாங்குவது, ஒரு நெசவாளரின் கைத்திறனுக்கு அளிக்கும் அங்கீகாரம். ஒரு கிராமப் பொருளை நாம் வாங்குவது, ஒரு கைவினைஞரின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை. உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருளை நாம் பயன்படுத்தும்போது, அது நமது மண்ணின் உற்பத்தித் திறனுக்கு அளிக்கும் ஊக்கம்.

இன்றைய காலகட்டத்தில், சுற்றுச்சூழல் நேயமிக்க, இயற்கை இழையால் ஆன ஆடைகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்து, புதிய வடிவமைப்புகளிலும், மின்னணு வணிகத் தளங்கள் வாயிலாகவும் கதர் கிராமத் தொழில் பொருட்களை எளிதில் அனைவரும் அணுகும் வகையில் மேம்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கதரங்காடிகள் வழியாக, ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு இரகங்களைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி, நம் நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதரைத் தேர்ந்தெடுப்போம், கைத்திறனைப் போற்றுவோம், உள்ளூர் உற்பத்திக்கு உயிரூட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply