பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆவின் மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்து, மாதவரம் பால் பண்ணையை பார்வையிட்டார்.
இந்திய தர நிர்ணய ஆணையம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரநிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் செய்வதற்காக, சென்னை, மாதவரத்தில் ரூ.2.23 கோடியில் அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை முதல்வர் விஜய் நேற்று திறந்துவைத்தார்.
இந்த ஆய்வகமானது, நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாதவரம் பால் பண்ணையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் அங்கு பால் கையாளும் முறை மற்றும் பால் விநியோகப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சென்னை மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் தினசரி 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை ரூ.152.26 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளையும் முதல்வர் நேரில் பார்வையிட்டு முன்னேற்ற நிலைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சான்றிதழ் வழங்கினார்: ஆவின் ஆய்வகத்தை பார்வையிட்ட பின்பு, தனது பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய் அங்கு மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்று அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பல்வேறு ஆவணங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
தொடர்ந்து தொகுதி மேம்பாட்டுப் பணிகள், பொதுமக்களின் குறைகள் கையாளப்படும் விதம் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட “மக்கள் சேவை” என்ற பிரத்யேக செயலியின் செயல்திறன் குறித்தும் முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வரின் ஆய்வு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,” முதல்வரின் வருகை என்பது திடீரென நிகழ்ந்தது. எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வந்திருந்தவர்களிடம் நேரடியாக மனுக்களை முதல்வர் வாங்கினார். அதில் வேலைவாய்ப்பு, வீடு வசதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், கடந்த ஜூலை 14 முதல் அக்.6ம் தேதி வரை சமூகநலம், வருவாய், வீட்டுவசதி, குடிநீர்வழங்கல் என 27 துறைகளுக்கு 2,280 புகார்கள் வந்துள்ளதையும், அதில் 85 சதவீதம் மனுக்கள் மீது நிவர்த்தி செய்யப்பட்டது குறித்தும் முதல்வரிடம் விளக்கினோம்” என்றார்.

