‘தமிழகத்தில் 3.5%-ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று பேட்டியளித்திருக்கிறார். பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் இடஒதுக்கீட்டை தவெக அரசு பங்கு போடக் கூடாது. தமிழகத்தில் 3.5% ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று பேட்டியளித்திருக்கிறார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15(4), 15(5) ஆகியவற்றின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர, மதத்தின் அடிப்படையில் யாருக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க இயலாது. இந்நிலையில், ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் விரிவுபடுத்துவது முறையானதல்ல. குறிப்பாக, இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களே.
எனவே, தன்னை ‘அனைவருக்குமான அரசு’ என்று முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, சமூக நீதியை கூறுபோடும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலும் எழுந்துள்ள இந்தக் கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

