தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர் விசிக தலைவர் திருமாவளவனை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்புகளுக்கு பின் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: மரியாதை நிமித்திமாக இந்த சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்திய கூட்டணியில் மிக முக்கியமான அங்கமாக விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
காவிரி விவகாரத்தை பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் எப்போதும் தமிழக விவசாயிகளின் பக்கம்தான். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் உள்ளன.
முன்னதாக வேளச்சேரியில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விபத்தில், வன்முறைகளில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கு வதையும், அடுத்த தலைமுறையினரை பாதுகாக்க அரசு பணி வழங்குவதையும் விசிக ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.
கட்சி சார்ந்து பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்ற பார்வை முக்கியமானது. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கும் நடைமுறை நல்லது என கருதுகிறேன்.
காவிரி விவகாரத்தில் முதல்வர் பேசவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் கட்சித் தலைவர்கள் நான் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள் என்றார்.

