“தமிழகத்தில் விசிக இன்றி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது” – திருமாவளவன்

Priya
13 Views
1 Min Read

“தமிழகத்தில் விசிக இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் உருவாகி இருக்கிறது” என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.

மதுரையில் முன்னாள் விசிக நிர்வாகி முடக்காத்தான் பாண்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்று பேசியது: “இன்றைக்கு தமிழகத்தில் விசிக இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற அளவுக்கான சூழல் உருவாகி இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இப்படி நமது இயக்கம் வளர்ந்து இருக்கும் இந்த நேரத்தில் நமது இயக்க போராளிகள் முடக்காத்தான் பாண்டி, தம்பி பாவரசு ஆகியோர் நம்மிடமில்லை என்பது கவலை அளிக்கிறது. அவர்கள் ஆற்றி பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.

தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக உடனே சென்னைக்கு செல்லவேண்டி உள்ளது. ஜூலை 5-ம் தேதி சென்னையில் நடக்கும் விசிகவின் விருது வழங்கும் விழாவில் முன்னணி பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும். ஆகஸ்ட் 17-ல் எனது பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறோம். இவ்வாண்டு தமிழ் தேசிய எழுச்சி மாநாடாக நடக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதையொட்டி மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு உங்களை எல்லாம் நேரில் சந்திக்கிறேன். மண்ணுரிமை போராளிகள் நினைவு நாள் பூதக்குடியில் ஏற்பாடு செய்திருந்த போதிலும், அதில் பங்கேற்க முடிய வில்லை. அதில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களான பாவளன், கனியமுதன், முத்துப்பாண்டி, செல்லப்பாண்டி, கண்ணதாசன், ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பர்” என்று அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply